Wednesday, August 11, 2010

105~110 செய்ந்நன்றியறிதல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

106  மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
          துன்பத்துட் டுப்பாயார் நட்பு

குற்றமில்லாதவரின் நட்பை மறந்திடாமல் இருக்கவேண்டும். நமது துன்பநேரத்தில் உதவியாய் இருந்தவரின் நட்பை விட்டுவிடாமல் இருக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

மாசற்றார் - குறையற்றவர் மாசற்றவர் குற்றமில்லாதவரின்
கேண்மை - நட்பை தொடர்பை பழக்கத்தை
மறவற்க - மறவாமல் இரு(க்க)
துன்பத்துள் - நமது துன்பநேரத்தில்
துப்பாயார் - உதவியாய் இருந்தவரின்
நட்பு - நட்பை
துறவற்க - விட்டுவிடாதே மறந்துவிடாதே
--------------------------------------------------------------------------------
துப்பு - பயன் உதவி
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி ...இக்குறளில் வரும் 'துப்பு'க்கும் இதேப்பொருள்தான்

--------------------------------------------------------------------------------
'மறவற்க' 'துறவற்க'
'செய்' என்பது கட்டளைச்சொல்லாக வரும் 'செய்யவேண்டும்' என்பது அறிவுரைப்போல் வரும் 'செய்க' 'நிற்க' 'ஓடுக' இவைப்போன்ற சொல்வகை கட்டளைக்கும் வேண்டுகோளுக்கும் நடுவே அமைந்துள்ளது தமிழின் ஒருவகை சிறப்பு
--------------------------------------------------------------------------------
107  எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
          விழுமந் துடைத்தவர் நட்பு

தம் துன்பத்தைத்துடைத்தவர் நட்பை எழுமையினையுடைய ஏழுப்பிறப்பும் எண்ணியிருப்பர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உள்ளுவர் - நினைத்திருப்பர் எண்ணியிருப்பர்
தங்கண் - தம்மிடத்து
விழுமம் - துன்பம்
எழுபிறப்பும் - ஏழுபிறப்பும்
எழுமை - எழுச்சியினையுடைய (பெருமை கூர்மை 'மை' - குணத்தைக்குறிக்ககூடியது )
--------------------------------------------------------------------------------
109  கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
          வொன்றுநன் றுள்ளக் கெடும்

ஒருவர் செய்யும் மிகக்கொடுமையான தீமைகூட நமது உள்ளத்தைப்புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால் அந்த ஒருவர் முன்னர் நமக்குச்செய்த நன்மையை மட்டும் நினைத்துப்பார்த்தாலே போதுமானது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கொன்றன்ன - கொன்று+அன்ன - கொல்வதைப்போன்ற (அன்ன - போன்ற)
இன்னாசெயினும் - தீமைசெயினும்
(அவர்செய்தவொன்று) நன்றுள்ள - நன்று+உள்ள
(செய்த+ஒரு) நன்றியினை எண்ணிப்பார்த்தால் கெடும்
--------------------------------------------------------------------------------