Monday, June 28, 2010

441~445 பெரியாரைத்துணைக்கோடல் (பொருட்பால் - அரசியல்)

442  உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
          பெற்றியார்ப் பேணிக் கொளல்

தனக்கேற்பட்ட துன்பங்களை நீக்கி மேலுந்துன்பம்வராமல் முன்னறிந்துகாக்கும் தன்மையுடையவரை பேணித்துனையாககொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

உற்றநோய் - அடைந்ததுன்பம்
நீக்கி - துன்பத்திலிருந்து விடுவித்து
உறாமை - இதுவரைவராத(துன்பத்தையும்) 
முன் + காக்கும் - முன்னறிந்துக்காக்கும்
பெற்றியார் - தன்மையுடையவரை
பேணி - போற்றி
கொளல் - துனையாக வைத்துக்கொள்ளவேண்டும்
--------------------------------------------------------------------------------
443  அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
          பேணித் தமராக் கொளல்

பெரியாரைப்போற்றி தமக்கு சுற்றத்தாராக்கிக்கொள்ளுதல் பெறத்தக்கவரியபேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அரிய - அரிது அரியது
அரியவற்றுளெல்லாம் அரிதே - அரியவற்றுள் எல்லாம் அரிது
பெரியாரைப்பேணி - பெரியாரைக்கவனித்து
தமராக்கொளல் - தமர்+ஆக+ கொளல் (நம்முடையவராக வைத்துக்கொள்ளுதல்)
--------------------------------------------------------------------------------
அற்புதம் - வடமொழி

Thursday, June 24, 2010

621~625 இடுக்கண் அழியாமை (பொருட்பால் -> அரசியல்)

623  இடும்பைக் கிடும்பை படுப்பர் இடும்பைக்
          கிடும்பை படாஅ தவர்

துன்பத்திற்கு வருந்தாதவர் அந்த துன்பத்திற்கே துன்பமுண்டாக்குவர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

இடும்பைக்கு + இடும்பை - துன்பத்திற்கு துன்பம்
படுப்பர் - கொடுப்பார் உண்டாக்குவர்
இடும்பை படாதவர் - துன்பப்படாதவர் வருந்தாதவர்
--------------------------------------------------------------------------------
படுப்பர் - அவன் பாடாபடுத்துவான்
துன்பதிற்கே துன்பம் - திருப்பதிக்கே லட்டு
--------------------------------------------------------------------------------
625  அடுக்கி வரினும் அழிவிலா னுற்ற
          விடுக்கண் இடுக்கட் படும்

அடுத்தடுத்து துன்பம் வந்துகொண்டேயிருந்தாலும் தனது கோட்பாட்டிலிருந்து மாறாமல் உறுதியாகயிருப்பவனையடைந்த துன்பமே துன்புற்றுபோகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அடுக்கி வரினும் - துன்பம் அடுத்தடுத்து வந்துகொண்டேயிருந்தாலும்
அழிவிலான் - உறுதியாகயிருப்பவனை
உற்ற - அடைந்த
இடுக்கண் - துன்பம்
இடுக்கண் + படும் - துன்புற்றுபோகும்
--------------------------------------------------------------------------------
'இடுக்கணழியாமை' 'இடுக்கண் அழியாமை' எது சரியென்று புரியவில்லை
--------------------------------------------------------------------------------

Wednesday, June 23, 2010

491~495 இடனறிதல் (பொருட்பால் -> அரசியல்)

493  ஆற்றாரு மாற்றி யடுப இடனறிந்து
          போற்றார்கட் போற்றிச் செயின்

தனக்குயேற்ற இடத்தையரிந்து பகைவரிடத்திலிருந்து தன்னை பாதுகாத்துச்செயற்பட்டால் வலிமையில்லாதவர்கூட வென்றுவிடுவார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

ஆற்றாரும் - வலிமையில்லாதவரும் ஆற்றலில்லாதவர்கூட
ஆற்றி + அடுப - வென்றுவிடுவார் முடித்துவிடுவார்
இடனறிந்து - தனக்கு சரியான இடத்தையரிந்து
போற்றார்கண் - பகைவரிடத்தில் (தன்னை போற்றார்)
போற்றி - தன்னை பாதுகாத்து
செயின் - செய்தால்
--------------------------------------------------------------------------------
ஆற்றி + அடுப - ஆற்றிடுவர் என்பதை இலக்கணத்திற்காக அவ்வாறு எழுதியிருக்கலாமோ
--------------------------------------------------------------------------------

வணக்கம்

Wednesday, June 16, 2010

971~975 பெருமை (பொருட்பால் -> ஒழிபியல்)

972  பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
          செய்தொழில் வேற்றுமை யான்

பிறப்பினால் அனைவரும் ஒன்றேதான். செய்யுஞ்செயல்களின் வேற்றுமையால் சிறப்பு ஒத்திருக்காது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பிறப்பொக்கும் - பிறப்பினால் ஒன்றாகும் (ஒப்பாகயிருக்கும்)
எல்லா+உயிருக்கும் -அனைவரும் 
செய்தொழில்  - செய்யுஞ்செயல்
வேற்றுமையான் - வேறுபட்டால்
சிறப்பு + ஒவ்வா - சிறப்பு ஒத்திருக்காது
--------------------------------------------------------------------------------
975  பெருமை யுடையவ ராற்றுவார் ஆற்றின்
          அருமை யுடைய செயல்

பெருமைக்குடையவர் ஒன்றை செய்தால் அதை அருமைவாய்ந்தசெயலாகத்தான் செய்வார்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பெருமையுடையவர் - பெருமைக்குடையவர்
ஆற்றின் - ஒன்றை செய்தால்
அருமையுடையசெயல் - அருமைவாய்ந்தசெயலாகத்தான்
ஆற்றுவார் - செய்வார்
--------------------------------------------------------------------------------

Sunday, June 13, 2010

881~885 உட்பகை (பொருட்பால் - நட்பியல்)

881  நிழல்நீரும் இன்னாத வின்னா தமர்நீரும்
          இன்னாவாம் இன்னா செயின்

நிழலும் நீரும் தமக்கு துன்பந்தரும்போது இனியவையல்ல அதுபோல நெருக்கமானவுறவுகூட இனியதல்லதவற்றை செய்யும்போது இனியவரல்லவே
 --------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நிழல்நீரும் - நிழலும் நீரும்
இன்னாத  - இனிமையானதாகயில்லதபோது
இன்னா -  இனிமைதராதவை
தமர்நீரும் - தமக்கு நெருக்கமானவரும்
இன்னாவாம் - இனியவரல்லவே
இன்னா செயின் - இனியதல்லதவற்றை செய்யும்போது
 --------------------------------------------------------------------------------

882  வாள்போல் பகைவரை யஞ்சற்க அஞ்சுக
          கேள்போல் பகைவர் தொடர்பு

வாள்கொண்டு தாக்கும் பகைவரைக்கண்டு அஞ்சதெவையில்லை உறவினர்போலுறவாடும் பகைவரின்நட்பை அஞ்சுக
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

வாள்போல் - வாளைகையில்வைதிருக்கும்
பகைவரை - பகைவரைக்கண்டு
அஞ்சற்க - அஞ்சவேண்டாம்
கேள்போல் - உறவினரைப்போலிருக்கும்
பகைவர் - பகைவரின்
தொடர்பு - நட்பை
அஞ்சுக
--------------------------------------------------------------------------------
உள் + பகை - உட்பகை
கேள்போல் - யாதும் ஊரே யாவரும் கேளீர்
தொடர்பு - 'சவகாசம்' என்பதைவிட 'தொடர்பு' என்று பயன்படுத்தலாம்
வாளைக்கொண்டு - வாள்கொண்டு
--------------------------------------------------------------------------------

Thursday, June 10, 2010

281~285 கள்ளாமை (அறத்துப்பால் -> துறவறவியல்)

285  அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
          பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

பிறர்பொருளை கையாடயெண்ணி அவரின் மறதியை எதிர்ப்பார்பவரிடதே அருள்கருதி அன்புடையாராகுங்குணம் இருக்காது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பொருள்கருதி - பிறர்பொருளை கையாடயெண்ணி
பொச்சாப்பு - அவரின் மறதியை
பார்ப்பார் + கண் - எதிர்ப்பார்பவரிடதே
அருள்கருதி - அருள்காட்ட எண்ணி
அன்புடையர் +ஆதல் - அன்புடையாராக ஆவது
இல் - இருக்காது

Monday, June 7, 2010

391~395 கல்வி(பொருட்பால் -> அரசியல்)

391  கற்க கசடறக் கற்பவை கற்றபின்
         நிற்க அதற்குத் தக

பிழையறகற்பிப்பவற்றை கற்கவேண்டும் கற்றபின் அதைப்பின்பற்றி நடக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கசடறக்கற்பவை என்பது ஓருசொல். பிழையில்லாமற்கற்பிக்கும் நூல்களைக்கற்க கற்றபின் நிற்க அதற்குத் தக
கற்க கசடற - க் இல்லாமலிருந்திருந்தால் ’பிழையில்லாமல் கற்க’ என்று பொருள்
--------------------------------------------------------------------------------

393  கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
          புண்ணுடையர் கல்லா தவர்

கற்றறிந்தவரே கண்ணுடையவர் எனப்படுபவர் கல்லாதவர் முகதில் இரண்டு புண்களையுடையவர்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கண் + உடையர் - கண்களை + உடையவர்
என்பவர் - எனப்படுபவர்
கற்றோர் - கற்றறிந்தவரே
கல்லாதவர் - கல்லாதவர்
முகத்து+ இரண்டு - முகதில் இரண்டு
புண் + உடையர் - புண்களை + உடையவர்
--------------------------------------------------------------------------------
படிக்கத்தேரிந்தவர் மற்றும் கற்றறிந்தவர் இருவரும் வேறு
--------------------------------------------------------------------------------
கண்களை + உடையவர் = கண்களையுடையவர் = கண்ணுடையவர்

236~240 புகழ் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

237  புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
          யிகழ்வாரை நோவ தெவன்

தனக்கு புகழுண்டாகும்படி வாழாதவர் தன்மீதுவருத்தப்படாமல் தன்னை இழிவாகபேசுவோரை வெறுப்பதுயேன்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

புகழ்பட - புகழுண்டாகும்படி
வாழாதார் - வாழாதவர்
தம் + நோவார் - தன்மீது வருத்தப்படாமல்
இகழ்வாரை - இழிவாகபேசுவோரை
நோவது + எவன் - வெறுப்பது + ஏன்
--------------------------------------------------------------------------------
நோவு - ‘உடம்புவலிக்குது’ என்பதை சென்னைத்தமிழில் இன்றும் ’ஒடம்புநோவுது’ என்றுதான் கூறுவர்
--------------------------------------------------------------------------------

Saturday, June 5, 2010

641~645 சொல்வன்மை (பொருட்பால் -> அமைச்சியல்)

642 ஆக்கமும் கேடும் அதனால் வருதலாற்
         காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு

ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படுமென்பதால் எந்தவொரு சொல்லிலும் குறைபாடுநேராமல் கவனமாகவிருக்கவேண்டும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

சொல்வன்மை - சொல்லின் வலிமை
ஆக்கம் - பெருக்கம் உருவாக்கம்
கேடு - அழிவு
அதனால் - சொல்வன்மையால்
வருதலால் - வருவதால், வருவது ஆதலால்
காத்தோம்பல் - காத்துநடக்கவேண்டும்
சொல்லின்கண்+சோர்வு - சொல்லில் சோர்வு ஏற்படாமல் (சோர்வேற்படாமல்)
--------------------------------------------------------------------------------

643  கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
           வேட்ப மொழிவதாஞ் சொல்

கேட்போரை கவர்ந்துவைக்கும் தன்மையுடைதாகவும் கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக்கேட்கக்கூடியதாகவும் அமைவதே சிறந்தசொல்வன்மை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கேட்டார் - சொல்லை கேட்போரை
பிணிக்கும் - கட்டிவைக்கும்
தகையவாய் - அத்தகையவாக
கேளாரும் - கேட்காதவரும்
வேட்ப - வேண்டி விரும்ப
மொழிவதாம் + சொல் - அவ்வாறுசொல்வதே சிறந்தசொல்
--------------------------------------------------------------------------------
தகை=இயல்பு=குணம்
வேட்கை - எங்குதல் காதல் வெட்கை
வேட்புமனு - விருப்பத்தைதெரிவிக்கும் மனு
வேட்பாளர் - பதவிக்கு விருப்பபடுபவர்??
--------------------------------------------------------------------------------

161~165 அழுக்காறாமை (அறத்துப்பால் -> இல்லறவியல்)

162 விழுப்பேற்றி னஃதொப்ப தில்லையார் மாட்டு
       மழுக்காற்றி னன்மை பெறின்
(விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
 அழுக்காற்றின் அன்மை பெறின்)

யாரிடத்திலும் பொறாமையில்லாத தன்மையை பெற்றிருந்தால் அதற்கு ஈடானது மேலானச்சிறப்புகளில் வேறெதுவும் இல்லை
--------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

யார் மாட்டும்     - யார் இடத்திலும்
அழுக்காற்றின்   - பொறாமைப்படுதல்
அன்மை               - இல்லாமை
பெறின்                  - பெற்றால்
விழுப்பேற்றின் - மேலான நன்மைகளிலேயே

அஃது ஒப்பது     - அதைப்போன்றது, அதற்கு ஈடானது
இல்லை              - வேறு எதுவும் இல்லை
--------------------------------------------------------------------
அழுக்காறு          - பொறாமை
விழுப்பேற்றம்   - விழுப்பம் ஏற்றம்
ஒழுக்கம் விழுப்பந் தரலான் (குறள், 131)
விழுப்பம் - நன்மை, சிறப்பு. ஏற்றம் - உயர்வு
--------------------------------------------------------------------

163  அறனாக்கம் வேண்டாதா னென்பான் பிறனாக்கம்
           பேணா தழுக்கறுப் பான்

பிறரின் முன்னேற்றத்தை பாராட்டாமல் பொறாமைகொள்பவன் தனக்கு அறத்தையும் முன்னேற்றத்தையும் விரும்பாதவனாவான்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறன் + ஆக்கம் - அறத்தையும் முன்னேற்றத்தையும்
வேண்டாதான் - வேண்டாதவன் விரும்பாதவன்
என்பான் - எனப்பவனாவான்
பிறன் + ஆக்கம் - பிறரின் முன்னேற்றத்தை
பேணாது - பாராட்டாமல்
அழுக்கறுப்பான் - பொறாமைகொள்பவன்
அழுக்காறு - பொறாமை
--------------------------------------------------------------------------------

165  அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
           வழுக்கியுங் கேடீன் பது

பொறாமைவுடையவருக்கு அதுவொன்றேபோதும் பகைவர் கேடுதல்தர தவறினாலும் பொறாமை கேடுதல்தரும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அழுக்காறு - பொறாமை
உடையார்க்கு - உடையவருக்கு
அதுசாலும் - அதுமிகும் (அதுவொன்றே போதும்) (சால -> மிகுந்த)
ஒன்னார் - பகைவர்
வழுக்கியும் - தவறினாலும்
கேடீன்பது - கேடு + ஈன்பது - கேடுதல் + தருவது
அழுக்காறாமை - போறாமைகொள்ளாமை

841~845 புல்லறிவாண்மை (பொருட்பால் -> அங்கவியல்)

841  அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
           இன்மையா வையா துலகு

அறிவுப்பஞ்சந்தான் மிகக்கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப்பொருட்படுத்தாது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறிவின்மை - அறிவில்லாமை
இன்மையுள் - இல்லாமை பலவுள்
இன்மை - இல்லாமை
பிறிதின்மை - பிரபோருட்கள்ளிலாதது
இன்மையா - இல்லாததாக
வையாது+உலகு -வைத்துக்கொள்ளாது+உலகு
புல்லறிவு(+ஆண்மை) - (சிறியஅறிவு) - சிறியயறிவு (புல்- சிறிய)
--------------------------------------------------------------------------------

842  அறிவிலான் னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
           மில்லை பெறுவான் றவம்

அறிவில்லாதவன் நெஞ்சமகிழ்ந்து ஒன்றை ஈகைசெய்வது பெறுகிறவனின் நல்வினையின்விளைவேயன்றி வேறொன்றுமில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறிவிலான் - அறிவில்லாதவன்
நெஞ்சு + உவந்து - நெஞ்சம் மகிழ்ந்து
ஈதல் - ஒன்றை ஈகைசெய்வது
பிறிதியாதும் + இல்லை - வேறொன்றுமில்லை
பெறுவான் + தவம் - அதை பெறுகிறவன் பெற்றபெறு
புல்+அறிவு - சிறிய + அறிவு
--------------------------------------------------------------------------------
நல்வினையின்விளைவு- தமிழ்
புண்ணியம் - வடமொழி
மனமகிழ்ந்து என்பதைவிட நெஞ்சமகிழ்ந்து தூயதமிழ் मन