Monday, April 26, 2010

551~555 கொடுங்கோன்மை (பொருட்பால் -> அரசியல்)

553  நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
          நாடொறும் நாடு கெடும்

நாள்தொறும் நன்மைதீமைகளை ஆராய்ந்து செய்யவண்டியகடமைகளை செய்யாதமன்னன் நாள்தொறும் தன்நாட்டை இழந்துகொண்டே வருவான்
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

நாடொறும் - நாள் + தொறும்
நாடி - ஆராய்ந்து
முறை - செய்யவண்டியகடமைகளை
செய்யா மன்னவன் - செய்யாத மன்னன்
நாடொறும் - நாள் + தொறும்
நாடு கெடும் - நாட்டையிழப்பான்
--------------------------------------------------------------------------------
தினமும் தினம் தின் வடமொழிசார்ந்தசொல். நாள் ஞாயிறு - தமிழ்
--------------------------------------------------------------------------------
555  அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
        செல்வத்தைத் தேய்க்கும் படை - 555
(அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
 செல்வத்தைத் தேய்க்கும் படை - 555)

கொடுமையான ஆட்சியின் துன்பந்தாங்காமல் மக்கள்விடும் கண்ணீரே அம்மன்னன் ஈட்டிய செல்வம் புகழ் அனைத்தையும் அழிக்கும் பெருங்கருவி
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அல்லல் பட்டு - துன்பப்பட்டு
ஆற்றாது - பொறுக்காமல், தாங்காமல்
அழுத கண்ணீர் - மக்கள் விடும் கண்ணீர்
அன்றே - அல்லவா
செல்வத்தை - தலைவனின், மன்னனின் செல்வத்தை
தேய்க்கும் - குறைக்கும், அழிக்கும்
படை - பெரும் கருவி
--------------------------------------------------------------------------------

Sunday, April 25, 2010

521~525 சுற்றந்தழால் (பொருட்பால் -> அரசியல்)

521  பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
          சுற்றத்தார் கண்ணே யுள

ஒருவர் செல்வத்தையிழந்துநிற்கும் காலத்திலும் அவரிடம் வைத்திருந்த பழையநட்பை கொண்டிருத்தல் சுற்றத்தாரிடமே உள்ளது
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

பற்று + அற்ற+ கண்ணும் - செல்வத்தையிழந்துநிற்குங்காலத்திலும்
பழைமை - அவரிடம் வைத்திருந்த பழையநட்பை
பாராட்டுதல் - (பழையநட்பை) கொண்டிருத்தல்
சுற்றத்தார் கண்ணே - சுற்றத்தாரிடமே
உள - உள்ளது
பற்று என்பது ஒருவன் பற்றுவைதிருக்கும் செல்வதைக்குறிப்பது
--------------------------------------------------------------------------------
அற்ற+ கண் - கணம் கண் இவை காலத்தைக்குறிக்குஞ்சொற்கள் காலம் என்பது கால் என்ற வடமொழியைச்சார்த்த சொல்லாகயிருக்கலாம்
--------------------------------------------------------------------------------
திருக்குறளில் அதிகார எண் 81 - பழமை. இது பழையபோருட்களைக்குறிப்பதில்லை பழைய நட்பினைக்குறிப்பதே
--------------------------------------------------------------------------------

Thursday, April 22, 2010

1001~1005 நன்றியிற்செல்வம் (பொருட்பால் -> ஒழிபியல்)

1001 வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
            செத்தான் செயக்கிடந்த தில்

நிறைந்துவழியுமளவு பெருஞ்செல்வம் வைத்திருந்து அதை பயன்படுத்தாதவன் இறந்தவனைப்போன்றவன் அப்பொருளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

நன்றியில் செல்வம் - பயனில்லாத செல்வம்
வாய் சான்ற - நிறைந்துவழியுமளவு

பெரும்பொருள் - பெருமளவு செல்வம்
வைத்தான் - வைத்திருப்பவன்
அஃது + உண்ணான் - அதை பயன்படுத்தாதவன்
செத்தான் - இறந்தவனைப்போன்றவன்
செய + கிடந்தது + இல் - அப்பொருளால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை
--------------------------------------------------------------------------------
சால - நிறைந்த - சான்ற
வாய் - நுழைவாய் பணப்பெட்டியின் வாய்
வாய் சான்ற - நிறைந்துவழியுமளவு
--------------------------------------------------------------------------------
உண்ணுதல் - அனுபவித்தல்
அனுபவம் என்ற வடமொழிசான்ற சொல்லுக்கு நான் நீண்டநாள்தேடிய தமிழ்ச்சொல்லுக்கு திருவள்ளுவர் ஒருவகை பதிலளித்துள்ளார்
--------------------------------------------------------------------------------

1002 பொருளானா மெல்லாமென் றீயா திவறு
            மருளானா மாணாப் பிறப்பு

போருளாலேதான் எல்லாமாகும் என்றுகருதி அதை பிறர்க்குக்கொடுக்காமல் மயங்கியிருந்தால் அது அவனுக்கு நிறைவற்றப்பிறப்பாக அமையும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பொருளான் + ஆம் - போருளாலேதான்
எல்லாம் + என்று - அனைத்துமே உண்டாகுமென்று
ஈயாது + இவறும் - பிறர்க்கு தரமால் பற்றிவைத்துக்கொள்ளும்
மருளான் (+ ஆம்) - மயக்கத்தினாலே (அமையும்)
மாணாப்பிறப்பு - நிறைவற்றப்பிறப்பு
--------------------------------------------------------------------------------

Wednesday, April 21, 2010

765~770 படைமாட்சி (பொருட்பால் -> அங்கவியல்)

770  நிலைமக்கள் சால வுடைத்தெனினும் தானை
           தலைமக்க ளில்வழி யில்

நிலையான வீரர்கள் நிறையயிருக்கிறார்கள் என்றபோதிலும் படைக்கு தலையில்லையென்றால் செல்லும்வழி நோக்கு சரியிருக்காது
--------------------------------------------------------------------------------
தெளிப்பொருள் விளக்கம்

நிலைமக்கள்          - நிலையானமக்கள் பின்வாங்காதவீரர்கள்
சால                                      - நிறைய மிகவும்
உடைத்து + எனினும் - இருக்கிறார்கள் என்றபோதிலும்
தானை                               - படை
தலைமக்கள் + இல்     - தலைவர் தலைவி இல்லையென்றால்
வழி + இல்                        - நோக்கம் செல்லும் வழி

Monday, April 19, 2010

356~360 மெய்யுணர்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)

359  சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
          சார்தரா சார்தரு நோய்

எதை பற்றிக்கொள்ளவேண்டும் என்ற மெய்யுணர்ந்து தேவையற்ற பற்றுகளை அகற்றி நாம் நடந்தால் அந்தப்பற்றினால் வருந்துன்பம் நன்மைகளையழித்து நம்முடன் வராது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

சார்பு - சார்ந்திருப்பது பற்றுவைத்திருப்பது நம்மை ஈர்துவைத்திருப்பது
சார்புணர்ந்து - எதைப்பற்றிக்கொள்ளவேண்டும் என்ற மெய்யுணர்ந்து
சார்பு கெட – தேவையற்ற பற்றுகளையகற்றி
ஒழுகின் - நாம் நடந்தால்
சார்தரும் + நோய் - அந்தப்பற்றினால் வருந்துன்பம்
மற்றழித்து - நன்மையீட்டும் மற்றவைகளையழித்து
சார்தரா – நம்முடன் வராது சேர்ந்துவராது
--------------------------------------------------------------------------------
சார்தரா - will not give company to us (the troubles)

351~355 மெய்யுணர்தல் (அறத்துப்பால் -> துறவறவியல்)

355  எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
          மெய்ப்பொருள் காண்ப தறிவு

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்துவிடாமல் அதுபற்றியயுண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எத்தன்மைத்து + ஆயினும் - எந்த தன்மையையுடையதாகவிருந்தாலும்

Sunday, April 18, 2010

426~430 அறிவுடைமை (பொருட்பால் -> அரசியல்)

426  எவ்வ துறைவ துலக உலகத்தோ
          டவ்வ துறைவ தறிவு

உலகம் எவ்வாறு நடக்கிறதோ அவ்வாறு உலகத்தோடு நடப்பதே அறிவுடைமையெனப்படும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

எவ்வது                                      - எவ்வாறு
உறைவது உலகம்              - உலகம் நடக்கிறதோ
உலகத்தோடு + அவ்வது - அவ்வாறு உலகத்தோடு
உறைவது அறிவு                - நடப்பது அறிவு

Wednesday, April 14, 2010

1061~1065 இரவச்சம் (பொருட்பால் -> ஒழிபியல்)

1061 கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணு
           மிரவாமை கோடி யுறும்

நெஞ்சில்லுள்ளதை மறைக்காமற்காட்டும் கண்போல இருப்பதை மறைக்காமல் மனமகிழ்ந்து ஈகைசெய்பவரிடத்திற்கூட இரவல் கேட்காதது கொடிமடங்கு நல்லது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கரவாது - மறைக்காமல் ஒளிக்காமல்
உவந்து + ஈயும் - மனமகிழ்ந்து ஈகைசெய்யும்
கண் + அன்னார் + கண்ணும் - கண்போன்றவரிடத்திலும்
(அவர்கண்ணும் - அவரிடத்திலும்)
இரவாமை - இரவல் கேட்காதது
கோடி + உறும் - கோடிபெறும் கொடிமடங்கு நல்லது

கண் + அன்னார் - கண் + போன்றவர்.
அகத்தின்னழகு முகத்திற்தெரியும் -உள்ளத்திலிருப்பதை மறைக்காமல் காட்டும் கண் அதுபோல மறைக்காமல் ஈகைசெய்வோரை கண்போன்றவர் என்றுக்கூறுகிறார்
--------------------------------------------------------------------------------
அதுபோல - அதைப்போல
கண்போன்றவர் - கண்ணைப்போன்றவர்
அதை - "ஐ" வந்தால்தான் "ப்" வரும்
--------------------------------------------------------------------------------
1062 இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
            கெடுக உலகியற்றி யான்

பிறரிடங்கையேந்தி இவ்வுலகில் உயிர்வழவேண்டுமானால் அவ்வாறனவுலகை இயற்றியவன் அலைந்துதிரிந்து கேடுக
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
இரவல் - கையேந்துவது
இரந்தும் - பிறரிடங்கையேந்தி(யும்)
உயிர்வாழ்தல் + வேண்டின் - உயிர்வழவேண்டுமானால்
உலகு + இயற்றியான் - அவ்வாறனவுலகை இயற்றியவன் (படைத்தவன்)
பரந்துகெடுக - அலைந்து திரிந்து கேடுக
--------------------------------------------------------------------------------
இரவச்சம் - கையேந்தும் நிலையைக்கண்டு அஞ்சுவது

தனிவொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்
--------------------------------------------------------------------------------

291~295 வாய்மை (அறத்துப்பால் -> துறவறவியல்)

291  வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
          தீமை யிலாத சொலல்

உண்மையெனச்சொல்லப்படுவது என்னவென்றால் எந்தவொரு தீமையையுந்தராதச்சொற்களை சொலுதலேயாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்
வாய்மை + எனப்படுவது - உண்மையெனச்சொல்லப்படுவது
யாதெனின் - என்னவென்றால்
யாதொன்றும் - எந்தவொரு
தீமை + இலாத - தீமையைத்தராத சொற்களை
சொலல் - சொல்லுதல்

Monday, April 12, 2010

331~335 நிலையாமை (அறத்துப்பால் -> துறவறவியல்)

331  நில்லாத வற்றை நிலையின வென்றுணரும்
          புல்லறி வாண்மை கடை

நிலையில்லதவற்றை நிலையானவையென்று நினைக்கும் சிற்றறிவுதன்மை கிழ்தன்மையானது
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

நில்லாதவற்றை - நிலையில்லதவற்றை
நிலையின + என்று - நிலையானவையென்று
உணரும் - நினைக்கும்
புல்+ அறிவாண்மை - சிறிய அறிவுத்தன்மை
கடை - கடைசியில் வைக்கப்படும் கிழ்தன்மையானது
--------------------------------------------------------------------------------
338  குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
          உடம்போ டுயிரிடை நட்பு

உடம்புக்கும் உயிருக்கும் இடையேயான உறவு முட்டைவோட்டை தனியேவிட்டு பறவை பறந்துவிடுவதைப்போன்றதே
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குடம்பை - முட்டைவோடு
தனித்து + ஒழிய - தனித்துக்கிடக்க
புள் - பறவை
பறந்து + அற்றே - பறந்துவிடுவதைப்போலவே
உடம்போ டு - உடலோடு
உயிர் + இடை - (உடம்புக்கும்) உயிருக்கும் இடையே
நட்பு - உறவு பற்று
--------------------------------------------------------------------------------
குடம்பை - குடுவை. சார்ந்தசொற்கள்?

691~695 மன்னரைச்சேர்ந்தொழுதல் (பொருட்பால் -> அமைச்சியல்)

691  அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
           விகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

அடிக்கடி மனம்மாறும் வேந்தருடன் பனிபுரிபவர் அவரிடம் மிகவும் நெருங்கிவிடாமலும் மிகவும் விலகிவிடாமலும் நெருப்பில் குளிர்காய்வாரைப்போல இருக்கவேண்டும்.
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அகலாது - அகன்று விலகிவிடாமல்
அணுகாது-மிகவும் நெருங்காமலும்
தீக்காய்வார் - நெருப்பில் குளிர்காய்வாரை
போல்க - போலிருக்க
இகல் - (மனம்)மாறும்
வேந்தர் - வேந்தரை
சேர்ந்து ஒழுகுவார் - உடனிருப்பவர்கள்
--------------------------------------------------------------------------------
'நிற்க’ ’செய்க’ என்பதைப்போல ’அதைப்போல் செய்க’ என்பதை ’போல்க’ என்று கூறியுள்ளார்
--------------------------------------------------------------------------------
693  போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
          தேற்றுதல் யார்க்கும் அரிது

நாம் நம்மை காத்திடவேண்டுமேன்றால் அறியபிழைகள் செய்யாமல் காத்திடவேண்டும் பிழைச்செய்தபின் மன்னரைத்தேற்றுதல் எவருக்கும் அரியசெயலாகும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

போற்றின் - போற்றவேண்டுமேன்றால் காத்திடவேண்டினால்
அரியவை போற்றல் - அறியபிழைகள் வராமல் காத்திடவேண்டும்
கடுத்தபின் - மன்னருக்கு சந்தேங்கம் கொண்டபின்
தேற்றுதல் - அவரை தேற்றுதல்
யார்க்கும் அரிது - எவருக்கும் அரியசெயல்
--------------------------------------------------------------------------------
போற்றுதல் - காத்தல் பின்பற்றுதல் வாழ்த்துதல் வழிமொழிதல்
--------------------------------------------------------------------------------

Wednesday, April 7, 2010

201~205 தீவினையச்சம் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

203  அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
           செறுவார்க்குஞ் செய்யா விடல்

நமக்கு தீங்குசெய்பவர்க்குக்கூட தீமைசெய்யாதிருப்பது நாமறிந்த அறிவுகளிளெல்லாம் சிறந்தது எனப்படும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

அறிவினுள் + எல்லாம் - நாமறிந்த அறிவுகளிளெல்லாம்
தலையென்ப - சிறந்தது எனப்படுவது
செறுவார்க்கும் - நமக்கு தீங்குசெய்பவர்க்கும்
தீய - தீயவை
செய்யா விடல் - செய்யாதிருப்பது
--------------------------------------------------------------------------------

Tuesday, April 6, 2010

956~960 குடிமை (பொருட்பால் -> ஒழிபியல்)

956  சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
          குலம்பற்றி வாழ்துமென் பார்

குறையற்ற நன்மக்களின் வாழ்கை வாழவேண்டும் என்றெண்ணுபவர் வஞ்சனைக்கொண்டு உயர்ந்ததல்லாத நிலையில்லாதவற்றை செய்யமாட்டார்
--------------------------------------------------------------------------------

தெளிபொருள் விளக்கம்

மாசற்ற - குறையற்ற
குலம்பற்றி - நன்மக்களின் வாழ்கை நங்குடியின் வாழ்கை
வாழ்தும் + என்பார் - வாழவேண்டும் என்றெண்ணுபவர்
சலம்பற்றி - வஞ்சனைக்கொண்டு சினங்கோண்டு
சால்பு + இல - உயர்ந்ததல்லாத நிலையில்லாதவற்றை
செய்யார் - செய்யமாட்டார்
--------------------------------------------------------------------------------
957  குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
           மதிக்கண் மறுப்போ லுயர்ந்து

நல்லக்குடியில் பிறந்தவரிடத்தில் காணப்படும் சிறுக்குற்றங்கூட நிலவிலுள்ள கறைப்போல ஓங்கிவிளங்கும்
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

குடிப்பிறந்தார்கண் - நல்லக்குடியில் பிறந்தவரிடத்தில்
விளங்கும் குற்றம் - காணப்படும் குற்றம்
விசும்பின் - விண்ணிலிருக்கும்
மதிக்கண் - நிலவிடம்
மறுப்போல் - கறைப்போல
உயர்ந்து - ஓங்கிவிளங்கும்
--------------------------------------------------------------------------------
விசும்பு - விண்

61~64 புதல்வரைப்பெறுதல் (அறத்துப்பால் -> இல்லறவியல்)

61   பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
          மக்கட்பே றல்ல பிற

நாம்பெறக்கூடியவற்றுள் அறியவேண்டியதையறிந்த அறிவுடையப்பிள்ளைகளை பெறுவதைவிட சிறந்தது நானறிந்ததில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

பெறும் + அவற்றுள் - நாம் அடையக்கூடியவற்றுள் பெறக்கூடியவற்றுள்
அறிவு + அறிந்த - அறியவேண்டியதையறிந்த (அறியவேண்டியதை அறிந்த)
மக்கள் + பேறு - (அறிவுடைய) பிள்ளைகளைப்பெறுவது
அல்ல பிற - அதைவிட பிறவற்றை அதைவிடச்சிறந்தது
யாமறிவதில்லை - நான் அறிந்ததில்லை (நானறிந்ததில்லை)
--------------------------------------------------------------------------------
திருவள்ளுவர் நான் என்று கூறும் மற்றொரு குறள் - 1071
--------------------------------------------------------------------------------

Friday, April 2, 2010

1071~1075 கயமை (பொருட்பால் -> ஒழிபியல்)

1071 மக்களே போல்வர் கயவர் அவரன்ன
           வொப்பாரி யாங்கண்ட தில்

கீழ் எண்ணங்கொண்டவர் பார்பதற்கு நன்மக்கட்போன்றே தோன்றுவர் அதைப்போன்ற ஒற்றுமையானதை நான் வேறெங்கும் கண்டதில்லை
--------------------------------------------------------------------------------
தெளிபொருள் விளக்கம்

கயவர் - கீழ் எண்ணங்கொண்டவர்
மக்களே போல்வர் - பார்பதற்கு நன்மக்கட்போன்றே தோன்றுவர்
அவர் அன்ன - அவரைப்போன்ற அதைப்போன்ற
அன்ன - போன்ற
ஒப்பாரி - ஒற்றுமையானதை
யாங்கண்டது இல் - நான் நாம் வேறெங்கும் கண்டதில்லை
--------------------------------------------------------------------------------
திருவள்ளுவர் நான் என்று கூறுவதை வேறெங்கும் கண்டதில்லை
--------------------------------------------------------------------------------